மகாளய அமாவாசையின் முக்கியத்துவம் என்ன ? இந்த மகாளய அமாவாசையை தவறவிடாதீர்கள்|Mahalaya Amavasai 2023

ஒரு வருடத்தில் தைப்பொங்கல்,தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி இது போன்று நிறைய பண்டிகைகளை கொண்டாடுகிறோம் .அது போலவே மாத மாதம் வரக்கூடிய அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, ஏகாதசி, கிருத்திகை என்று நிறைய தினங்களுக்காக கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்து வழிபாடு செய்கிறோம். அதேபோல நமக்காகவே நம்ம கூடவே இருந்து நமக்காக பார்த்து பார்த்து பண்ண நம்ம முன்னோர்களுக்காக வருடத்துல ஒரு நாள் விரதம் இருந்து அவர்களை வழிபட்டோம் என்றால் அவங்களும் சந்தோஷப்படுவார்கள். அதோடு நமக்கும் ஒரு மன நிம்மதியும் திருப்தியும் இருக்கும்.
சிலபேர் மாதம் வரக்கூடிய அமாவாசையில் முன்னோர்களுக்காக விரதம் இருந்து படையல் போட்டு காகத்துக்கு சாப்பாடு வைத்து சாப்பிடுவார்கள், மற்ற அமாவாசையைக் காட்டிலும் மஹாளய அமாவாசை ஏன் அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நாம் இந்த மஹாளய அமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான்.
மஹாளய என்றால் ‘கூட்டாக வருதல்’ என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.
மஹாளய பட்சம் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே, மஹாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மஹாளய அமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.
இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


